சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்பு

சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை அமர்வில் பங்கேற்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் திருகோணமலையிலுள்ள மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பெர் 29ஆம் நாளன்று நடந்த மாகாண சபை அமர்வில் இறுதியாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.

ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்றைய தினம் நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி – -ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பைஷல் இஸ்மாயில்)