கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய விமான ஓடுபாதை நியமிக்கத் திட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய விமான ஓடுபாதை நியமிக்கத் திட்டம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான ஓடுபாதையொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தற்போது காணப்படுகின்ற விமான ஓடு பாதையானது மிகவும் பழைமை வாய்ந்தது எனவும், இந்த ஓடு பாதையை மேலும் ஒன்றோ அல்லது இரண்டு வருடங்களுக்கு பயன்படுத்த முடியாது எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான ஓடு பாதையை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுமாக இருந்தால், இலங்கைக்கான வருமானம் பாரியளவில் இழக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணிகளுக்கு சிறந்த விமான சேவைகளை வழங்கும் வகையில், விமான ஓடு பாதை நிர்மாணப் பணிகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய விமான ஓடு பாதையொன்றை நிர்மாணிப்பதற்காக 8 பில்லியன் ரூபா கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த வருடம் நவம்பர் மாதத்தில் விமான நிலையத்தில் புதிய வளாகமொன்றையும் கட்டடமொன்றையும் 65 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.