ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தரைப்படைகளை அனுப்ப தயார் – சவுதி அறிவிப்பு

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தரைப்படைகளை அனுப்ப தயார் – சவுதி அறிவிப்பு

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ராணுவ நடவடிக்கையால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மக்களோடு மக்களாய் ஊடுருவி, அப்பாவி பொதுமக்களில் பலரை பிணைக்கைதிகளாகவும், இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாகவும் பயன்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முழுமையாக முற்றுகையிட்டு அழிக்க இயலாத சூழல் நிலவி வருகின்றது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து போராயுதங்களையும் வழங்கிவரும் சவுதி அரேபியா, அண்டைநாடான ஏமனில் அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சியை ஆதரித்து வருகின்றது.

அங்கு அதிபரின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சிரியாவின் எதிரி நாடான ஈரான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், கூட்டுப்படைக்கு தலைமை வகிக்கும் அமெரிக்கா சம்மதித்தால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தங்கள் நாட்டு தரைப்படைகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாக இந்த கூட்டுப்படையில் அங்கம் வகிக்கும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஏமனில் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் சவுதி நாட்டு விமானப்படைக்கு தலைமை ஏற்றிருக்கும் பிரிகாடியர் ஜெனரல் அஹமத் அல் அஸ்ஸிரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அமெரிக்கா ஏற்றுகொண்டு சம்மதம் தெரிவித்தால் சிரியாவுக்குள் விரைவில் சவுதி தரைப்படை வீரர்கள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.