கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றில் வழக்கு

கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றில் வழக்கு

பிரித்தானிய மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது.

அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் பிரித்தானிய மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக வழங்கியது.

அன்றிலிருந்து இன்று வரை அந்த வைரம் பிரித்தானிய மகாராணியின் கிரீடத்திலேயே இருந்து வருகிறது.

இந்த வைரத்துக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவும் உரிமை கோரி வருகிறது.

மேலும் இந்தியாவுக்கு மீண்டும் இந்த வைரத்தை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சட்டம் படித்த வழக்கறிஞரான ஜாவெத் இக்பால் ஜஃப்பெரி என்பவர் இது தொடர்பாக லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முதலில் இந்த வழக்கை ஏற்க மறுத்த நீதிபதி தற்போது மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார்.

மேலும் கோஹினூர் வைரம் சட்டப்பூர்வமாக எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாகவே இந்தியா கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானும் உரிமை கோரியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.