நிதியமைச்சருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை

நிதியமைச்சருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனையை சபாநாயகரிடம் இன்று ஒப்படைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றுக்கு இது பற்றி கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், மினி வரவு செலவுத் திட்டமொன்றை மீளவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இணங்கப்பட்டுள்ளது.

வருமான வரி, மூலதன வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன உயர்த்தப்பட்டுள்ளன.

ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்து அந்நிய செலாவணி ஒதுக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

மறைமுக அடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர நிதி அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.

கூடுதல் வட்டிக்கு கடன் பெற்றுக்கொள்வதனால் அது பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

நிதி விவகாரங்கள் குறித்த பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்பட்ட போதிலும், நிதி அமைச்சர் எதேச்சாதிகார போக்கில் செயற்படுகின்றார்.

இதனால் நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்ற கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது என அந்தப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனையொன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.