நாமலுக்கு எதிராக வலுப்பெறும் “கிரிஷ் சதுக்கத் திட்டம்”

நாமலுக்கு எதிராக வலுப்பெறும் “கிரிஷ் சதுக்கத் திட்டம்”

கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த ‘கிரிஷ் சதுக்கம்’ திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்‌சவுக்கு கமிஷனாக 450 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்துக்காக கிரிஷ் நிறுவனம் சிங்கப்பூர் எச்.எஸ்.பீ.சி வங்கியில் நாமல் ராஜபக்‌ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பிலிட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

அரசியல் பழிவாங்கலுக்காகவே தனது மகன் நாமல் ராஜபக்‌ச, நிதி மோசடிப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தார். கிரிஷ் சதுக்கத் திட்டத்தில் நாமல் ராஜபக்‌ச தற்பொழுது மாட்டிக்கொண்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஹோட்டல், அலுவலகங்கள் மற்றும் வீடுகளைக் கொண்ட ‘கிரிஷ் சதுக்கம்’ ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்தியாவைச் சேர்ந்த கிரிஷ் குறூப் நிறுவனம் 650 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டது.

இத்திட்டத்துக்காக 450 மில்லியன் ரூபா “கமிஷன் ” பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் மூன்று அரசியல் வாதிகளின் பெயரும், பல்வேறு வர்த்தகர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியே கிரிஷ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் நாமல் ராஜபக்‌சவுக்குச் சொந்தமான ‘நாமல் ராஜபக்‌ச அசோசியேட்’ என்ற சட்ட நிறுவனத்தாலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

அப்போது பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவராக இருந்த கலாநிதி காலக்க கொடஹேவா கிரிஷ் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தார்.

குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட அனுமதியை வழங்குவதற்கு 450 மில்லியன் ரூபா தேவை என நாமல் ராஜபக்‌சவிடமிருந்து நாலக்க கொடஹேவாவுக்கு குறுஞ்செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு கிரிஷ் கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 450 மில்லியன் ரூபா தமக்குச் சொந்தமானது என நகர அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டிருந்தது.

எனினும் முழுமையான பணத்தையும் தாம் செலுத்தியிருப்பதாக அக்கம்பனி மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இத்திட்டம் இடைநடுவில் தடைப்பட்டதுடன், 550 மில்லியன் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

அதேநேரம், நாமல் ராஜபக்‌சவின் பணிப்புரைக்கு அமைய நாலக்க கொடஹேவா 400 மில்லியன் ரூபாவை கிரிஷ் கம்பனிக்கு மீளச் செலுத்தியுள்ளார்.

இதன்மூலம் குறித்த கொடுக்கல் வாங்கலுக்காக 450 மில்லியன் ரூபா நாமல் ராஜபக்‌சவால் கமிஷனாகப் பெறப்பட்டுள்ளமை புலனாகிறது.

இது தொடர்பில் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனதென அவர் குறிப்பிட்டார்.