தீர்ப்பு வழங்கிய அதிர்ச்சியில் நீதிமன்றில் மயங்கி விழுந்த பெண்!

தீர்ப்பு வழங்கிய அதிர்ச்சியில் நீதிமன்றில் மயங்கி விழுந்த பெண்!

கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட போது குறித்த பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

குறித்த பெண் பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த வேளையில், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று குறித்த பெண்ணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது மன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பெண்ணின் நடவடிக்கைகள் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மன்றில் கூறுகையில்,

குற்றச்சாட்டுக்கள் பல இவருக்கு இருந்த போதும் மேற்படி பெண் தொடர்ச்சியாக கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார் என நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததால் அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, நீதவான் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தால் அதிர்ச்சியடைந்த பெண் அக்கணமே மன்றில் மயங்கி வீழ்ந்தார்.