நான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கின்றேன் – மாலிங்க

நான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கின்றேன் – மாலிங்க

தான் எவ்விதத்திலும் அரவிந்த டி சில்வா’வுடனான மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை எனவும், அணித் தலைவராக எப்போதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முன்னாள் தேர்வுக்குழு செயலாளர் கபில விஜேகுணவர்தன’வுடனேயே ஆகும் என முன்னாள் இருபதுக்கு20 கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றைய வீரர்கள் IPL போட்டியில் ஏலம் போகாதது குறித்து என்னால் ஒன்றும் கூறமுடியாது, எனவும் அவர் தெரிவித்திருந்தார். அரவிந்த டி சில்வாவினால் கடந்த 05ம் திகதி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அரவிந்த மாலிங்கவை சாடியிருந்தமைக்கு பதிலளிக்கும் போதே மாலிங்க மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் அரவிந்த டி சில்வாவுடன் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருக்கவில்லை. அக்கதையானது பொய்யானது. தேர்வு குழுவானது 10 நிமிடங்களில் அணியினை தெரிவு செய்து முடித்தது, யாருக்கும் தெரியாது. காலையில் பார்க்கும் போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது.

2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். இதனால் விளையாடவில்லை, லஹிரு திரிமன்னவும் உபாதைக்கு ஆளாகி இடையில் வெளியேறினார். வீரர்கள் உபாதைக்கு முகங்கொடுப்பது வழக்கமே. நான் கூறுவது என்னவென்றால் மனிதர்களுக்கு கடந்த காலம் விரைவாகவே மறக்கப்படுகின்றன.

ஆனால், மாலிங்க’விற்கு ஏதும் நடந்தால்தான் எல்லோருக்கும் நன்றாக நினைவில் இருக்கும். IPL என்பது நான் மட்டும் ஆடும் விளையாட்டல்ல. ஏனைய வீரர்களை IPL விலைக்கு வாங்காததற்கு நான் என்ன செய்ய? கொஞ்சம் பின்னாடி சென்று கிரிக்கெட் வரலாற்றினை பரிசீலனை செய்து பாருங்கள்.

2011ம் ஆண்டு இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதை காரணமாக விளையாடவில்லை. அன்று அப்போட்டியில் நான் விளையாடாமல் இருந்தால், இந்தியா அணியுடனான போட்டி என்பதாலேயே மாலிங்க விளையாடவில்லை என  எல்லோரும் கதைத்திருப்பீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்..  நான் 12வருடமாக கிரிக்கெட் விளையாடுகின்றேன், ஆனால் எப்போட்டியிலும் இடையில் அணிக்கு இடைஞ்சல் தரும் வகையில் அணியினை விட்டு விலகவில்லை.

எதுவாக இருந்தாலும், நான் விளையாடியிருக்கின்றேன் இல்லையேல் விளையாடாமல் ஒதுங்கியிருப்பேன். ஒருநாளும் போட்டியில் விளையாடி அரைவாசியில் விலகியதில்லை. விளையாட முடியாது என்றால் முடியாது, முடியும் என்றால் முடியும். இப்போது நான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கின்றேன். கிரிக்கெட் விளையாடுவதும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.