சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி விவகாரம் தொடர்பான விசாரணையொன்றுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி தொடர்பில் இதுவரை பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா முகாம் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களுடன் இணைந்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும், விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் சிலரும் சென்றிருந்தனர்.

குறித்த வழக்கறிஞர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் உறவினர்கள் கொடுத்துள்ள முறைப்பாடு குறித்த விசாரணை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

இதில் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சார்பான வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விசாரணைக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

மேலும் சாவகச்சேரி சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.