ஹெலி ஊழலில் சோனியா கைது..?

ஹெலி ஊழலில் சோனியா கைது..?

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒரு இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வந்ததால், ஒப்பந்தம் அப்போதே ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், லஞ்சம் கொடுத்த இத்தாலியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இத்தாலி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி எழுப்பிய குற்றச்சாட்டால் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது குற்றம் சாட்டப்படும் நிலையில், இதுபற்றி டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘டுவிட்டரில்‘ நேற்று கருத்து தெரிவித்தார்.

அதில் அவர், ‘ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியையும், இத்தாலி கோர்ட்டு கூறியுள்ள காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுக்கிறேன். பா.ஜனதா ஒருபோதும் இதை செய்யாது. ஏனென்றால், அக்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ஆழ்ந்த புரிந்துணர்வு நிலவுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு வெறுமனே பேசிக்கொண்டிருக்குமே தவிர, நடவடிக்கை எடுக்காது‘ என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடைய 10 நாடுகளிடம் இருந்து ரூ.3600 கோடி மோசடி தொடர்பாக தகவல்களை பெற வேண்டும் என்ற நீதிமன்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதிகளின் 7 கோரிக்கைகள் ஏற்கனவே அனுப்பட்டு விட்டன. 3 மட்டும் இன்னும் அனுப்ப வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் இருந்து 10 நாடுகளில் இருந்து பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பெற வேண்டும் என்று கோரிக்கை கடிதங்கள் அனுப்பட்டன. அதில் துனிசியா, இத்தாலி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, யு.ஏ.இ., மோரிசியஸ், இஸ்ரேல், பின்லாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமலாக்கத் துறை விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு விசாரணைக்காக வரும் நாட்களில் சம்மன் அனுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு தியாகி, சிபிஐ போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.