ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி பதவி ராஜினாமா

ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி பதவி ராஜினாமா

தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர் மைக்கேல் பிளாட்டினி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன.

செப் பிளாட்டர் தனது பதவி காலத்தில் துணைத்தலைவராக இருந்த மைக்கேல் பிளாட்டினிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக கணக்கில் காட்டாமல் ரூ.13 கோடி வழங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்க நன்னடத்தை கமிட்டி பிபா தலைவர் செப் பிளாட்டர், பிபா துணைத் தலைவரும், ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவருமான மைக்கேல் பிளாட்டினி ஆகியோரை இடைநீக்கம் செய்ததுடன், இருவருக்கும் தலா 8 ஆண்டு காலம் தடையுடன் அபராதமும் விதித்தது.

இந்நடவடிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டது. பிபா மேல்முறையீடு குழு இந்த தண்டனையை 6 ஆண்டாக குறைத்தது. ரூ.60 லட்சத்தை அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டது.

தன் மீதான தடையை எதிர்த்து செப் பிளாட்டர், மைக்கேல் பிளாட்டினி ஆகியோர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர் மைக்கேல் பிளாட்டினியின் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் மைக்கேல் பிளாட்டினி நடத்தை விதிமுறையை மீறி செயல்பட்டதை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உறுதி செய்ததுடன், மைக்கேல் பிளாட்டினிக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு கால தடையை 4 ஆண்டாக குறைத்துள்ளது.

அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் ரூ.40 லட்சமாக குறைத்து உத்தரவிட்டது. தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் தண்டணை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மைக்கேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் நாட்டில் ஜூன் 10-ஆம் திகதி தொடங்க இருக்கும் நிலையில் மைக்கேல் பிளாட்டினி தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து மைக்கேல் பிளாட்டினி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த முடிவு எனக்கு இழைக்கப்பட்ட ஆழமான அநீதியாகும். இருப்பினும் தேசிய சங்கங்களின் விருப்பபடி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது நேர்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க போராடுவேன்’ என்றார்.

60 வயதான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் அணிக்காக 72 சர்வதேச போட்டியில் விளையாடி 41 கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்வது குறித்து ஆலோசிக்க ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சுவிஸ் நாட்டில் உள்ள பாசெல் நகரில் வருகிற 18-ந் திகதி நடைபெறவிருக்கிறது.