குசல் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க ICC இன்னும் தயாரில்லை..

குசல் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க ICC இன்னும் தயாரில்லை..

இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, ஊக்கமருந்து விவகாரத்தில் தவறுதலாகச் சிக்கியமையால் செலவிடப்பட்ட தொகை தொடர்பாகவும் அதை சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) மீளச்செலுத்த வேண்டுமா என்பது தொடர்பாகவும் தொடர்ந்தும் குழப்பம் நிலவுகிறது.

பல மாதங்கள் நீடித்த குசல்  பெரேராவின் ஊக்கமருந்து தொடர்பான விவகாரத்தில், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊக்க மருந்துக்கெதிரான சர்வதேச முகவராண்மையால் அங்கீகரிக்கப்பட்ட கட்டாரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் ஏற்பட்ட தவறின் காரணமாக, இந்தக் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

எனவே, இதற்கான செலவை, சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்க வேண்டுமென்ற கருத்து, இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரத்தில் காணப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த அச்சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, இவ்விடயத்தில் நட்டஈட்டை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை, வாய்மூலமாகச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சபையின் தலைவர் திலங்க சுமதிபால, சர்வதேச கிரிக்கெட் சபையுடன் நேரடியான தொடர்பில் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்விடயம் தொடர்பான செய்தி வெளியாகிச் சிறிது நேரத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, இவ்விடயத்தில் நட்டஈடு வேண்டுமென்ற கோரிக்கையை, இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்தோ அல்லது குசல் பெரேராவிடமிருந்தோ பெற்றிருக்கவில்லை எனவும், அவ்வாறு நட்டஈட்டை வழங்குவதற்கு, வாய்மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவோ சம்மதித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்விடயத்தில் கட்டார் ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தவறுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை பொறுப்பானது என்பதையும் அச்சபை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எனவே இந்த விடயத்தில், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் குசல் பெரேராவுக்கும் ஏற்பட்ட செலவுகள், மீள வழங்கப்படுமா என்பது குறித்தும்,

இதுகுறித்து மேலதிக நடவடிக்கைகள், இலங்கையிலிருந்து எடுக்கப்படுமா என்பது குறித்தும், குழப்பமான ஒரு நிலையே நீடிக்கிறது.

 

(நன்றி – மிரர்)