எக்னெலிகொட விவகாரம் – ஆட்கொணர்வு மனுவில் திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

எக்னெலிகொட விவகாரம் – ஆட்கொணர்வு மனுவில் திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் திருத்தமொன்றை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரியில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்.

அவரைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதனை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றுடன் இணைத்து உச்சநீதிமன்றத்தில் அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவராக பொலிஸ் மா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பெயரே வழக்கின் பிரதிவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

எனினும் புதிய பொலிஸ் மா அதிபர் பதவியேற்றுள்ள நிலையில் இலங்கக்கோனுக்குப் பதிலாக பூஜித ஜயசுந்தரவின் பெயரை சேர்ப்பதற்கு அனுமதி கோரி சந்தியா எக்னெலிகொட மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதற்கான அனுமதியை நேற்று வழங்கியுள்ளது.