அவுஸ்திரேலிய அணி வீரர் மார்ஷ் தொடரிலிருந்து வெளியேற்றம்..

அவுஸ்திரேலிய அணி வீரர் மார்ஷ் தொடரிலிருந்து வெளியேற்றம்..

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ், இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஷோன் மார்ஷின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டதாகவும், மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-கதிர்ச் சோதனையில், அவருக்கு என்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மார்ஷுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், உஸ்மான் கவாஜா இடம்பெறவுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் அவர் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த நிலையிலேயே, தற்போது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் இந்தத் தொடரில், அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த மிற்சல் மார்ஷ், அத்தொடர் முடிவிலேயே அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியதோடு, பின்னர் ஸ்டீவன் ஸ்மித், 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் நாடு திரும்பியிருந்தார். மார்ஷுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் நேதன் கூல்ட்டர் நைல், காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியிருந்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டி, தம்புள்ளையில் இன்று பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.