மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய கால அவகாசம்..

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய கால அவகாசம்..

சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களே இன்று அதிகமாக பாவனையில் உள்ளது. மக்கள் போக்குவரத்து சேவை குறைவாக காணப்படும் பிரதேசங்களில் அதிகமாக இம் மோட்டார் சைக்கிள்களே மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களால் வருடந்தோறும் அரசாங்கத்துக்கு அதிகமான வருமானம் இழக்கப்படுகின்றது.

இதனால் சட்ட ரீதியாக ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசீலித்ததன் பின்னர் சலுகையின் அடிப்படையில் பதிவினை மேற்கொள்ளவதற்கும், இச்சலுகையினை வழங்கும் போது சட்ட ரீதியாக மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திலுள்ள விதிகளுக்கு அமைவாக மோட்டார் சைக்கிள்களுக்காக இதனை நடைமுறைப்படுத்துவதற்கும், இச் சலுகையினை 04 மாத காலத்துக்கு மாத்திரம் வழங்குவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.