ஷகீப் கொலை விவகாரம் – GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு.

ஷகீப் கொலை விவகாரம் – GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு.

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி, ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்று(29) உத்தரவிட்டது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொ​லை தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொலைச் சந்தேகநபர்கள் 9 பேரும், மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், தங்களது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி, பிணை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

இருப்பினும், அவ்விண்ணப்பங்களை நிராகரித்த நீதவான், இவர்கள் கொலைச் சந்தேகநபர்கள் என்பதால், அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாதென்று கூறியதுடன், அந்த 9பேரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிட்டார்.

இந்நிலையில், சுலைமானின் பிரேத பரிசோதனை அறிக்கையை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி சமர்பிக்கவுள்ளதாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால், நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான், கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவரது சடலம், கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனெல்ல – ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, ஓகஸ்ட் 24ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.