உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை 2வது தடவையும் நீதிமன்றினால் நிராகரிப்பு.

உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை 2வது தடவையும் நீதிமன்றினால் நிராகரிப்பு.

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானது நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு இரகசியப் பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று(30) இரண்டாவது தடவையாகவும் குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ரஸ்யாவிற்கான தூதுவர் குறித்த வழக்கின் குற்றவாளியாக இன்னும் குறிப்பிடப்படாத போது அவருக்கு பிடியாணை பிறப்பிப்பதானது சட்டகொள்கைகளுக்கு முரணானது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது தங்கியுள்ள நாட்டின் முகவரியைத் தெரிந்து அதற்கு தபால் மூலம் அறிவிப்பு அனுப்புமாறும் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.