நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

கணனி மென்பொருள் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளையும் செய்து கால்தடம் பதித்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் அதிபராக உள்ள பில் கேட்ஸ் அவரது மனைவி மெலின்டா கேட்சுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

உலகெங்கிலும் போலியோ நோயை ஒழிக்கும் பணியில் இந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகமெங்கும் புதுப்புது நோய்கள் உருவாவதற்கு காரணமாக விளங்கும் நுளம்புகளை பிடித்து, அவற்றின் உடலில் உள்ள மரபணுக்களின் அடிப்படையில் அவை சுமந்துத் திரியும் நோய்க் கிருமிகள் எவ்வகையை சேர்ந்தது, என்ற ஆராய்ச்சியை நடத்த மைக்ரோசொப்ட் அதிபர் தலைமையிலான தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் இத்தகைய நுளம்புகளால் பரவக்கூடிய தொற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை தடுக்கலாம்.

மேலும், இவ்வகையில் பரவிவரும் பல நோய்களை தடுப்பதற்கான மாற்று மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளிலும் முன்கூட்டியே இறங்கலாம் என இந்த குழுவினர் நம்புகின்றனர்.

இதற்காக, தரையின் மேல்பகுதிகளில் சுற்றித்திரியும் நுளம்புகளை பிடிப்பதற்கென நவீன ரக ஆளில்லா விமானங்களை ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இவ்வகை விமானங்களுக்கான பராமரிப்பு செலவு குறைவு, பலனும் அதிகம் என்பதால் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.