காணாமல்போன நெய்மரின் ஆதிக்கத்துடன்  கொலம்பியாவிடம் சரிந்தது பிரேசில்

காணாமல்போன நெய்மரின் ஆதிக்கத்துடன் கொலம்பியாவிடம் சரிந்தது பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வியைத் தழுவியது பிரேசில்.

தென் அமெரிக்காவின் சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் “சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் – கொலம்பியா அணிகள் மோதின.

வீரர்களை இடமாற்றி நிறுத்தியும் கொலம்பியாவின் ஆட்டத்தை பிரேசில் அணியால் தடுக்க இயலவில்லை. ஆனால் கொலம்பியாவின் நடுக்கள வீரர் கர்லாஸ் சான்செக் எதிரணியின் தாக்குதலை முறியடித்ததோடு, ஐந்து முறை உலகச் சாம்பியனான பிரேசில் அணியின் கோல் வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டார்.

மெதுவாக ஆட்டத்தை தொடங்கினாலும், போகப் போக பிரேசிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது கொலம்பியா, பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

சிவப்பு அட்டை: ஏற்கெனவே பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட பிரேசில் கெப்டன் நெய்மர், முதல் பாதியின் போது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிய பந்தை கையில் பிடித்ததற்கு மீண்டும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார்.

36வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜெய்சன் முரில்லோ உதைத்த பந்து பிரேசில் கோல் கீப்பர் ஜெஃபர்சன்னை தாண்டி கோலானது.

இதன் பின்னர் கடைசி வரை இரு அணிகளாலும் கோல்கள் அடிக்க இயலவில்லை. இருப்பினும்; வழக்கமான நேரத்துக்குப் பிறகு நான்கு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நேரத்திலும் 1-0 என்ற கணக்கைத் தாண்டி கோல்கள் விழவில்லை.

முடிவில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது.
வீணான வாய்ப்புகள்: 43, 44வது நிமிடங்களில் பிரேசில் அணிக்கு இரண்டு கோல் வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் கிடைத்த வாய்ப்பை பிரேசிலின் குவாட்ராடோ கம்பத்துக்கு வெளியே அடித்து வீணடித்தார். அடுத்த நிமிடத்தில் நெய்மர் அடித்த பந்தை எதிரணியின் கோல் கீப்பர் லாவகமாக தடுத்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர் இருஅணி வீரர்களும் திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக நெய்மருக்கும், கொலம்பியாவின் கர்லாஸ் பாக்காவுக்கும் நடுவர் சிவப்பை அட்டையை காண்பித்தார்.

இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை வெனிசுலாவுக்கு எதிராக நடைபெறவுள்ள “சி’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பிரேசில் அணியில் நெய்மர் விளையாட முடியாது.

கொலம்பியா இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் பிரேசிலிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

கோபா அமெரிக்கா தொடரில் 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரேசிலை வீழ்த்தியுள்ளது கொலம்பியா என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் கருத்து: ஆட்டத்துக்குப் பின்னர் பிரேசில் அணி வீரர் டானி ஆல்வ்ஸ் கூறுகையில், “நடுவர்கள் தங்களை நட்சத்திரங்களைப் போல் எண்ணுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நட்சத்திரங்கள் அல்ல. ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே அவர்கள் களத்தில் இருக்கின்றனர். கொலம்பியா வீரர்கள், நெய்மரின் இயல்பை புரிந்து கொண்டு அவரின் கோபத்தை தூண்டுகின்றனர்’ என்றார்.

கொலம்பியாவின் ஜேம்ஸ் ராட்ரிகியூஸ் கூறுகையில், “நாங்கள் சிறந்த விளையாட்டுத் திட்டத்தை வைத்திருந்தோம். அது சரியாக செயல்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்னர் வெனிசுலாவிடம் தோற்றபோதும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்.

மேலும் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி பிரேசிலை வீழ்த்தினோம். விளையாட்டில் சில சமயம் இதுபோன்று நிகழும்’ என்றார்.