சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று..

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று..

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று(03) கொண்டாடப்படுகின்றது.

பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.

குறித்த இத்தினம் பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

இந்நிலையில் ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் உலக நாடுகளின் வரிசையில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவற்றில் இலங்கையானது ஊடக சுதந்திரம் என்ற பிரிவில் 141 ஆவது இடத்தில் இருக்கின்றமை முன்னேற்றமற்ற நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)