சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்  குறித்து தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமரின் பங்களிப்பில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது என மக்கள் சமாதானம் மற்றும் கிறிஸ்த அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.எம்.கே. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

“போதை பாவனையற்ற – ஜீவன் நிறைந்த வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் போதை பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 5000 பேர் இத்தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர் என தேசிய ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சமரசிங்க இங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விசேட பிரகடனங்கள் வெளியிடப்படும் என்றும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு விசேட நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், போதையொழிப்பு தொடர்பில் விடேச கவனம் எடுத்து செயற்படும் ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் சமாதானம் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு- தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச்சபை மற்றும் இலங்கை பொலிஸார் ஆகியோர் இணைந்து இத்தேசிய விழாவை ஏற்பாடு செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.