சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா வெல்லும்.. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும் சங்கா ஆரூடம்..

சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா வெல்லும்.. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும் சங்கா ஆரூடம்..

சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி தக்க வைக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

8-வது சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை(01) முதல் ஆரம்பமாகிறது.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;

“.. குறித்த இந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஆசிய மண்டலத்தை சேர்ந்த 4 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய மண்டலத்தில் இந்தியா தான் முன்னணி அணியாக விளங்குகிறது. இந்திய அணி 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இந்த ஆண்டும் இந்த கோப்பையை வெல்லும் ஆற்றல் அந்த அணிக்கு உள்ளது.

உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி வலுவானதாகும். அணி வீரர்கள் கலவை நேர்த்தியாக உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு உண்மையிலேயே பலம் பொருந்தியதாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டியில் குறிப்பிடத்தக்க வீரர்கள். ஐ.பி.எல். போட்டி தொடரில் ஏமாற்றம் அளித்த விராட் கோஹ்லி நிச்சயம் நல்ல நிலைக்கு திரும்புவார். இந்திய அணியின் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டும் தான் லேசான கவலைக்குரிய விஷயமாகும். இந்த விஷயத்தில் அவர்கள் பழமைவாதத்தை கடைப்பிடிக்கக் கூடியவர்கள்.

இறுதிப்போட்டிக்கு எந்த அணி முன்னேறும்? என்பதை கணிப்பது கடினமான விஷயமாகும். ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று நான் கருதுகிறேன். ஒரு கால கட்டத்தில் ஒன்றிரண்டு அணிகள் மட்டுமே ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தின.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல அணிகள் வியத்தகு முன்னேற்றம் கண்டு இருக்கின்றன. தற்போது 4 முதல் 5 அணிகள் சமபலம் வாய்ந்ததாக விளங்குகின்றன. பெரிய போட்டியில் வெல்வது எல்லா அணிகளின் நோக்கமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் சில உலக தரம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்…” என தெரிவித்திருந்தார்.

 

(rizmira)