மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தவித்த காதலி

மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தவித்த காதலி

இந்தியா புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மீனவர் கோவிந்தன். இவரது மகள் விஜி (வயது 19). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்த விழுப்புரம் முட்டத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தனிமையில் சந்தித்து பேசும் போது திருமணம் செய்து கொள்வதாக விஜியிடம் கோவிந்தராஜ் உறுதி கூறிவந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும்படி விஜி வற்புறுத்தியபோது கோவிந்தராஜ் மறுத்துவிட்டார். விஜியை சந்தித்து பேசுவதையும் தவிர்த்து வந்தார். மேலும் வேலையையும் மாற்றிக்கொண்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த விஜி இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் பொலிசில் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலகராணி மற்றும் பொலிசார் கோவிந்தராஜை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பொலிசாரிடம் விஜியை திருமணம் செய்து கொள்ள கோவிந்தராஜ் 3 மாதம் அவகாசம் கேட்டார். இதற்கு விஜியும் சம்மதித்தார்.

ஆனால் 3 மாதம் கடந்த பின்னரும் விஜியை கோவிந்தராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதையடுத்து விஜி இதுபற்றி மீண்டும் வில்லியனூர் அனைத்து மகளிர் பொலிசில் முறையிட்டார்.

பொலிசார் கோவிந்தராஜை அழைத்து கேட்ட போது இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் நிலையத்துக்கு வந்து அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனை நம்பி விஜியை அவரது உறவினர்கள் மணமகள் போல் அலங்கரித்து இன்று காலை வில்லியனூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் இல்லை. வெகுநேரமாக காத்திருந்தும் கோவிந்தராஜ் வரவில்லை.

கோவிந்தராஜின் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் விஜியும் அவரது உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இதனால் விஜி பெரும் சோகமானார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.