செல்பி வித் பேய்”… தீயாய் பரவும் சுடுகாட்டு செல்பி!.

செல்பி வித் பேய்”… தீயாய் பரவும் சுடுகாட்டு செல்பி!.

‘செல்பி வித் டாட்டர்’ என்று பிரதமர் மோடி நேற்று தான் அழைப்புவிடுத்தார். ஆனால் சமூக வலைதளங்களில் இயங்கும் பெரியாரிஸ்டுகளோ கடந்த 10 நாட்களாக ‪#‎சுடுகாட்டு_Selfie_Challenge‬.. என்ற ஹேஷ்டேக்கை போட்ட கையோடு ஒவ்வொருநாளும் நள்ளிரவு 12 மணிக்கு சுடுகாட்டுப் போய் செல்பி எடுத்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பல்வேறு பெரியார் இயக்கத் தொண்டர்கள் “There is no god, there is no ghost” (“கடவுளும் இல்லை.. பேயும் இல்லை) என்ற முழக்கத்தை முன்வைத்து தொடங்கியதுதான் ‪#‎சுடுகாட்டு_Selfie_Challenge‬.. இதனை முதலில் தொடங்கி வைத்தது கோவையைச் சேர்ந்த திலீபன் மகேந்திரன் என்ற பெயாரியர் இயக்க தொண்டர்.

அவர் தமது முகநூல் பக்கத்தில் கடந்த 18-ந் தேதியன்று “‪#‎சுடுகாட்டு_selfie_challenge‬. நைட்டு ஒரு மணிக்கு நா ஏண்டா சுடுகாட்டுக்கு போனும்? ஆனா நா போவண்டா. இன்னைக்கு நைட்டு நா மட்டும் தனியா ஒரு மணிக்கு என் வீட்ல இருந்து 4 கிலோ மீட்டர் தள்ளி இருக்குற சுடுகாட்டுக்கு போறேன்… அங்க இருந்து செல்பி எடுக்க போறேன்… எனக்கு Life-ல அட்வென்சர், த்ரில், கிக் இதெல்லாம் வேனும்.. அதான்… தலைப்பு: கடவுளும் இல்லை, பேயும் இல்லை… Hint: There is No god, there is No Ghost….” என்று தொடங்கி வைத்ததுதான் இந்த சுடுகாட்டு செல்பி விவகாரம்..

அவர் ஃபேஸ்புக்கில் போட்ட கையோடு நள்ளிரவு சுடுகாட்டுப் போய் ‘உலா’ வந்து அதை படங்களாக்கிப் போட்டுவிட்டார். அவரைத் தொடர்ந்து முத்துரத்தினம் என்பவர் கையில் பிரியாணி பொட்டலத்துடன் நள்ளிரவு சுடுகாட்டு கிளம்பி போய் அங்கேயே உட்கார்ந்து ‘நன்றாக வெட்டிவிட்டு’ அதையே படமாக எடுத்துப் போட்டு மிரட்டியியிருக்கிறார்.

இவர்களைப் பின் தொடர்ந்து ‘தம்பியின் திலீபன் இளம் திராவிடன்’ ‘பெரியார் அசோக்’ ‘மிழலைக்கூற்ற போந்தை நெடுவேள் ஆதன்” என பல பெரியாரிஸ்டுகளும் நள்ளிரவுகளில் சுடுகாட்டுக்குப் படையெடுத்து செல்பிகளை குவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் தொடங்கிய சுடுகாட்டு செல்பி ஜூரம் சென்னைக்கும் எட்டியுள்ளது. சென்னை பெரியாரிஸ்டுகளும் இவர்களுக்குப் போட்டியாக களமிறங்க தொடங்கி உள்ளனர். தற்போது சுடுகாட்டு செல்பிதான் ஃபேஸ்புக்கில் பேயாக வலம் வருகிறது.