இந்திய அணியினை பாதி மொட்டையாக்கிய வங்கதேசம்

இந்திய அணியினை பாதி மொட்டையாக்கிய வங்கதேசம்

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியது. டெஸ்ட் போட்டியில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும், மழையால் பல நாள் ஆட்டம் தடைபட்டு, இறுதியில் சமநிலையானது.

ஒருநாள் போட்டிகளில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா தோற்றது. இதனால் வங்கதேசம் கோப்பையை கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டியில், இந்தியா வழக்கமான வகையில் ஆடி, வங்கதேசத்தை 77 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ செய்தது.

ஆனால், தங்கள் வாழ்நாளில் இதுவரை காணாத வெற்றியை கண்ட வங்கதேச ரசிகர்கள், ஏதோ பெரிய சாதனையை செய்தது போல கொண்டாட்டங்கள் நடத்தினர். வெறி கொண்ட அந்த நாட்டு ரசிகர்கள், இந்தியாவுக்காக பல நாட்டு மைதானங்களுக்கும் நேரில் சென்று நீண்ட காலமாக சப்போர்ட் செய்யும் சுதிர் என்ற ரசிகரையும் அடித்து துவைத்து, ஆனந்த கூத்தாடினர்.

இந்நிலையில், மற்றொரு அராஜகத்தை அந்த நாட்டின் வங்கமொழி பத்திரிகை ‘பிரோதோம் அலோ’ அரங்கேற்றியுள்ளது. அந்த பத்திரிகையுடன் திங்கள்கிழமைகளில் இணைப்பாக வெளிவரும், காமெடி இதழில் (ரோஸ் அலோ) இந்திய வீரர்கள் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளனர்.

மொட்டை தலை அந்த இதழின் அட்டையில், வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டேஷனரிகளில் கிடைக்கும், கட்டர் வகை கருவியை கையில் வைத்தபடி உள்ளார். அவருக்கு கீழே, இந்திய வீரர்கள், தோனி, ரஹானே, ரோகித்ஷர்மா, விராட் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் ஆகியோர் பாதி ஷேவ் செய்யப்பட்ட தலையுடன் காட்சியளிக்கின்றனர்.

இந்திய வீரர்கள் கையில் உள்ள பேனரில் “நாங்கள் பயன்படுத்திவிட்டோம். நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மானிடமுள்ள பேனரில், “டைகர் ஸ்டேஷனரி. வங்கதேசத்தில் உருவானது. முஷ்தபிஸ் கட்டர், டாக்கா, மிர்பூர் ஸ்டேடியத்தில் இருப்பார்” என்று எழுதப்பட்டுள்ளது.

முஸ்தபிசுர் ரஹ்மான், கட்டர் என்று கிரிக்கெட் பாஷையில் அழைக்கப்படும் ஸ்லோ பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். இதை குறிப்பிட்டுதான், அவர் கட்டர் (முடி வெட்டும்) என்பதை போலவும், இந்திய வீரர்கள் தலையை சிரைத்துவிட்டது போலவும், வங்கதேச பத்திரிகை தனது வன்மத்தை காட்டியுள்ளது. அப்பத்திரிகையின் பேஸ்புக்கில் போடப்பட்டுள்ள இந்த படத்துக்கு இன்று காலை வரை 4 ஆயிரம் லைக்குகள், 350 ஷேர்கள் ஆகியிருந்தன. நூற்றுக்கணக்கானோர் கமெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வீரர்களை கேலி செய்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர், அதுல்வாசன், இந்த செயல், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தையும், அதன் வீரர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். விளையாட்டில் தோல்வி என்பது ஒரு அங்கம். அதற்காக ஒரு நாட்டு வீரர்களை மற்ற நாட்டு பத்திரிகை இந்த அளவு தரம் தாழ்ந்து கேலி செய்வதை ஏற்கவே முடியாது என்றார்.