ரியோ ஒலிம்பிக்கில் போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோவுக்கு வாய்ப்பு

ரியோ ஒலிம்பிக்கில் போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோவுக்கு வாய்ப்பு

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்த வருடம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 வயதிற்குட்பட்டோர் கால்பந்து அணியில் 23 வயதிற்கு மேல் உள்ள மூன்று பேரை அணியில் சேர்க்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதால் போர்ச்சுக்கல் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவை விளையாட வைக்க அந்நாட்டின் கால்பந்து பெடரேஷன் முயற்சி செய்து வருகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் கால்பந்து பெடரேஷன் தலைவர் பெர்னாண்டோ கோமஸ் கூறுகையில்;

‘‘அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ரொனால்டோவை விளையாட வைக்க வாய்ப்புள்ளது. நாங்கள் 23 வயதிற்கு மேல் உள்ள மூன்று வீரர்களை அனுப்ப முடியும். அதில் ஒருவராக ரொனால்டோ பெயரை பரிசீலனை செய்துள்ளோம். ஆனால், இதுகுறித்து ஆலோசனை ஏதும் நடத்தவில்லை’’ என்றார்.

எதென்சில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 23 வயதிற்குட்பட்டோர் அணியில் ரொனால்டோ கலந்து கொண்டார். இதில் அந்த அணி தனது பிரிவில் கடைசி இடத்தை பிடித்தது குறிபிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை யூரோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இது முடிந்த சில நாட்களிலேயே ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால், போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோ பங்கேற்றால் தொடர்ச்சியாக விளையாட இருக்கும் அவருக்கு இந்த அட்டவணை மிகக்கடினமாக இருக்கும். மேலும், அவர் ரியல் மாட்ரிட் அணியின் பிரி-சீசன் மற்றும் 2016-17-ம் ஆண்டின் தொடக்க லா லீகா சீசனை இழக்க வேண்டியிருக்கும் என செய்தி வட்டாரங்கள் தெரிவிகின்றன.