ரஹானேவுக்கு சச்சினிடமிருந்து வாழ்த்து

ரஹானேவுக்கு சச்சினிடமிருந்து வாழ்த்து

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜிங்யா ரஹானேவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7 ஆம் தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணியில் கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட 6 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு மும்பையைச் சேர்ந்த அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர் இந்திய அணியை வழிநடத்த இருப்பது 15 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
கடைசியாக மும்பையைச் சேர்ந்த சச்சின் தெண்டுல்கர் 2000 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில் புதிய கேப்டன் ரஹானேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெண்டுல்கர் கூறுகையில், “ரஹானேவை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு நேர்மையான, கடினமாக உழைக்கக்கூடிய கிரிக்கெட் வீரர். அவரது பங்களிப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் என்னை எப்போதும் கவர்ந்த ஒரு விஷயம்.
அவர் தனது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து, பெருமிதம் கொள்ளச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அணியை திறம்பட வழிநடத்த வாழ்த்துகள்” என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.