இலங்கையில் மியான்மார் அகதிகள் துன்புறுத்தப்பட்டமை பாலியல் விவகார சாட்சியாளரை வெளியேற்றவே..

இலங்கையில் மியான்மார் அகதிகள் துன்புறுத்தப்பட்டமை பாலியல் விவகார சாட்சியாளரை வெளியேற்றவே..

மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த மியான்மார் அகதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கின் பிரதான சாட்சியாளரை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சிக்காகவே, கல்கிஸை பகுதியில் அகதிகள் துன்புறுத்தப்பட்டதாக, இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரால், நேற்று(02) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அகதிகள் துன்புறுத்தப்பட்டமை, இனவாத நடவடிக்கை என்பதை விட, மியான்மார் யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையை மறைக்க, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட நாடகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர், அடையாள அணி வகுப்பில் சாட்சியாளரால் அடையாளம் காட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர் ஒருவருமாவர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர், குறித்த அகதிகளை பிறிதொரு இடத்துக்கு மாற்ற, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததோடு, ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்றத்தின் அனுமதியும் இதற்காகக் கிட்டியது.

இதற்கமைய, குற்றம் சாட்டப்பட்டவர்களால் முடிந்தளவு விரைவில் இந்த அகதிகளை இலங்கையை விட்டு வெளியேற்ற முயற்சிக்கப்படுவதாகவும், அவர் மேலும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)