ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை ஆரம்பம்…

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை ஆரம்பம்…

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெ.ஏ.ரஞ்ஜித் தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை மீது ரஷ்யா விதித்தத் தடையின் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சரியான இராஜதந்திர கொள்கையை அனுசரித்ததால், பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது. இலங்கையிலிருந்து சென்ற அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் சாதகமான பதில் கிடைத்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்தார்.

கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஸ்லம் பெரேராவும் தேயிலை ஏற்றுமதி பற்றிய பிரச்சினைகளை விபரித்தார்.

ரஷ்யா விதித்த தடை இரு வார காலம் மாத்திரம் நீடித்ததால், தடையின் மூலம் பெரியளவிலான தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று திரு பெரேரா குறிப்பிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேயிலை இன்னமும் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் ஏற்றுமதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் தேயிலை கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்தக் காலப்பகுதியில் இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் கிராக்கி ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.