தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்க டிரம்ப் வலியுறுத்தல்…

தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்க டிரம்ப் வலியுறுத்தல்…

தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளதால், அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தொழிலாள்கள் பலர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்றுவதற்கு கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. குறித்த கிரீன் கார்டை பெறுவதற்காக தொழில்நுட்பத் துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்க டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், குடியேற்ற நடைமுறைகளில் உள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்தும் சீர்திருத்தங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.

திறமை வாய்ந்தவர்கள், நமது சமுதாயத்திற்கு பங்களிப்பை செய்யக்கூடியவர்கள், நமது நாட்டை மதித்து நேசிப்பவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். குடியேற்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அதற்கு இரு கட்சிகளும் (குடியரசு, ஜனநாயக கட்சி) ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

இளம் வயதில் பெற்றோரால் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டு சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 18 லட்சம் பேருக்கு குடியுரிமைக்கான வழியை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

டிரம்ப் கூறியிருக்கும், இந்த தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறையானது, திறமைவாய்ந்த இந்திய தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.