மஹிந்தவின் கடந்த கால அரசுக்கு ரோஸியிடமிருந்து தக்க பதிலடி

மஹிந்தவின் கடந்த கால அரசுக்கு ரோஸியிடமிருந்து தக்க பதிலடி

ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு தெரிவித்து மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை மறந்து மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கியுள்ளமை எவ்விதத்தில் நியாயமாகும் என ராஜாங்க அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்க கேள்வியெளுப்பியுள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோஸி சேனாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மஹிந்த ராஜபக்ஷ அன்று தனது சர்வாதிகார ஆட்சியை முடிவின்றி தொடர்வதற்காக அவசர அவசரமாக 18வது திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். இதன்போது சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே உட்பட பலர் எதுவுமே தெரிவிக்காது கையுயர்த்தி நிறைவேற்றினார்கள்.

ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரி தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டு நாட்டில் மீண்டும் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டது.

திருடர்கள் கூட்டத்தை பாதுகாப்பதற்காக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அரசை விட்டு வெளியேறியது தவறான முடிவு. எனவே அவர் தனது மனசாட்சியிடம் கேள்வி கேட்க வேண்டும். உண்மைக்கு முதலிடத்தை வழங்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவார்கள் என்று மார்ச் 12 பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. பல கட்சிகள் இதில் கையெழுத்திட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இதில் கையெழுத்திட்டது.

ஆனால் இன்று அம்முன்னணி மோசடிக்காரர்கள், திருடர்கள், எத்தனோல், போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வேட்பு மனுக்களை வழங்கியுள்ளது. இவ்வாறான கட்சியால் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தத்தான் முடியுமா?

ஐ.தே.கட்சியின் வேட்பு மனுவில் திறமையானவர்கள் படித்தவர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மோசடிக்காரர்களையும், திருடர்களையும் என்னோடு இணைத்துக் கொண்டிருந்தேன். குற்றம் செய்தோரை விடுவித்தேன் என மஹிந்த ராஜபக்ஷ தனது வாய்மூலமே வாக்களித்துள்ளார். இவ்வாறான ஒருவருக்கு இந்நாட்டில் மீண்டும் இடமளிப்பதாக மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயமாகும்.

கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைகளை நிர்மாணித்ததில் 86 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்திலும் மோசடிகள் தலைவிரித்தாடியது. மக்களுக்கு கடந்த அரசு எதனையும் வழங்கவில்லை.

ஆனால் எமது 100 நாள் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள், எரிபொருட்களின் விலைகள், வீட்டு சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைச் சுமை நீக்கப்பட்டது. இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

18ஐ ஒழித்து 19ஐ கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளோம். 100 நாட்களில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளை பெற்றுக்கொடுத்தோம். எதிர்காலத்தில் நிலையான ஆட்சியில் நாட்டையும் மக்களையும் பொருளாதார அபிவிருத்திக்கு கொண்டு செல்வோம்.

வேட்பு மனு தயாரிப்பின் போது அழுத்தம் அதிகரித்ததால் எனக்கு வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது என சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

என்ன அழுத்தம் வந்தது? யார் அழுத்தம் கொடுத்தது? அழுத்தம் காரணமாகவா மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டது? என்ற கேள்விகளை நான் கேட்கின்றேன்.

விசேட நிதிக் குற்ற விசாரணை பிரிவை மூடி விடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருடர்களை பாதுகாப்பதற்காகவே இந்த முயற்சியாகும்.

மஹிந்தவை மீண்டும் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து திருடர்கள் தப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்கு மக்கள் ஒருபோதும் துணை போகமாட்டார்கள் என்றும் ரோஸி சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

(riz)