சிறிய மீட்டாய்களை வாங்காதீர்கள் பெரியதாய் நான் தருகிறேன் – மஹிந்த

சிறிய மீட்டாய்களை வாங்காதீர்கள் பெரியதாய் நான் தருகிறேன் – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் வழங்கும் சிறிய மீட்டாய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முடிவடைந்த காலத்தில் அரசாங்கம் கொத்தமல்லியின் விலையை மாத்திரமே குறைத்ததாகவும் பின்னர் அதன் விலையும் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜகத் குமாரவின் தலங்கம தேர்தல் பிரசார அலுவலகத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட கடனை விட அதிகளவான கடனை இந்த அரசாங்கம் 100 நாளில் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த பணம் கொள்ளையிடப்பட்டதா அல்லது பிக்பொக்கட் அடிக்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது.

கட்டுநாயக்க அதிவேக வீதியை நிர்மாணிக்க போவதாக கூறி மூன்று சந்தர்ப்பங்களில் கடனை பெற்றுள்ளனர். நான் அப்படியான கள்ளத்தனமான வேலை எதனையும் செய்யவில்லை.

வீதிக்கு புதிதாக கல் ஒன்றை கூட போடாத அரசாங்கம், போலியகொடையில் சுவரொட்டி ஒட்டுவதற்காக மட்டும் சுவர் ஒன்றை நிர்மாணித்துள்ளது.

100 நாட்களுக்கு ராஜபக்ஷ ஒருவரை சிறையில் அடைக்க நிறைவேற்றுச் சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுத்தன.

2 ஆயிரத்து 500 ரூபாவை சமூர்த்தி உதவி பெறுவோருக்கு வழங்கியதன் காரணமாகவே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

அஸ்கிரிய, மல்வத்து விகாரைகளை புனரமைக்க கொடுத்த பணம் குறித்தும் சீல் துணிகளை வழங்கியமை பற்றியும் எமது அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போரினால் அழிந்து போன பள்ளி வாசல்கள், கோயில்கள் புனரமைத்தது பற்றி விசாரணை நடத்தப்படுவதில்லை.

நான் உழைத்த 18 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினாலும் இந்தளவு பணத்தை கொண்ட வங்கி ஒன்றை அமெரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பசில் ராஜபக்ஷ அரசியல்வாதி என்பதால், அவர் கைது செய்யப்பட்டமை ஆச்சரியப்படும் விடயமல்ல. ஆனால் அரச அதிகாரிகளை கைது செய்வதும் அவர்களிடம் விசாரணைகளை நடத்தி அரச சேவையை தரம் தாழ்த்துவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சுமார் 800 அரச ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அரச சேவை தரம் தாழ்ந்து போகும்.

நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், அரசியல்வாதிகளுக்கு தற்போது யுத்தத்தை விற்று சாப்பிட முடியாது. ஆயுத விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு வியாபாரம் இல்லாது போயுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே என்னை தோற்கடித்தனர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

(riz)