பிஸ்கெட் கம்பெனிக்காக தமிழ் மக்கள் உணர்வுகளை குறிவைக்கும் முரளி

பிஸ்கெட் கம்பெனிக்காக தமிழ் மக்கள் உணர்வுகளை குறிவைக்கும் முரளி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது பிஸ்கெட் நிறுவனத்தினை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி வேண்டுமென பேசத்தயாரா என சுதேச மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நேற்று(10) நடந்த அக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் மதிராஜ் கருத்து வெளியிடுகையில் யுத்தம் ஓய்ந்து போன 2009 மே மாதம் தான் தனது மகிழ்ச்சியான நாளென முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து தொடர்பில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமது கடும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். அத்துடன் அவரது பிஸ்கெட் நிறுவனமும் கவிழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது.

இதனாலேயே இப்பொழுது அவசர அவசரமாக அவர் மறுப்பு வெளியிட்டு வருகின்றார். நாம் பகிரங்கமாக சவால் விடுகின்றோம். அவர் நிம்மதி திரும்பியதாக சொல்லும் 2009ம் ஆண்டைய இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களிற்கு சர்வதேசத்திடமிருந்தோ அல்லது அவரது தற்போதைய எஜமானர்களிடமிருந்தோ நீதியை பெற்று தர முடியுமா என கேள்வி எழுப்புகிறோம்.