என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நடமாடும் சேவையின் காலம் நீடிப்பு

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நடமாடும் சேவையின் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில்முனைவோருக்கு மானிய அடிப்படையில் கடன் வழங்குவதற்காக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நடமாடும் சேவையை எதிர்வரும் சில நாட்களுக்கு முன்னெடுக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சேவையின் கீழ் சிறிய, நடுத்தர, சுயதொழில் மற்றும் கைத்தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் செப்டம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கிரிந்திவெல மஹா வித்தியாலயத்திலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் புத்தளம், மன்னார் மற்றும் காலி மாவட்டங்களிலும் ஒக்டோபர் 05ஆம் திகதி மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இச்சேவை முன்னெடுக்கப்படும்.

பாராளுமன்றத்தில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இதுவரை 93,000 மில்லியன் ரூபாய் நிதி 58,000 தொழில்வான்மையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு இலட்சம் முதல் 750 மில்லியன் ரூபா வரை வர்த்தக வங்கிகளில் கடன் பெற முடியும். சுயதொழில் முனைவோர் மற்றும் பட்டதாரிகளுக்கு வட்டியில்லாமலும் வியாபாரிகளுக்கு 50% தொடக்கம் 75% மானிய அடிப்படையிலும் கடன் வழங்கப்படவுள்ளது. விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முனைவோர் இதன்மூலம் பயன் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.