இலங்கை அணியை தொடர்ந்து பாகிஸ்தான் செல்லும் மற்றுமொரு அணி

இலங்கை அணியை தொடர்ந்து பாகிஸ்தான் செல்லும் மற்றுமொரு அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் லாகூர் நகரில் 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10 வருடங்களாக நடைபெறவில்லை.

10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 தொடரை இலங்கை அணி வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளை அயர்லாந்து கிரிக்கட் தலைமை நிர்வாகியான வொரன்ட் ட்யூட்ரோம் நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார்.

குறித்த தொடரின் போது பாகிஸ்தானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் அயர்லாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணியின் முன்னை வீரர்கள் திமுத் கருணாரத்ன, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்தனர்.

பாகிஸ்தான் மண்ணில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட அணியாக இலங்கை அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.