பேரினவாத ஏஜெண்டுகளுக்கு களம் திறக்கும் கட்சித்தாவல்கள்!!!

பேரினவாத ஏஜெண்டுகளுக்கு களம் திறக்கும் கட்சித்தாவல்கள்!!!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொள்கைகளை உயிரூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சிகள் கொள்கையிழந்து வெற்றிக்காக மட்டும் உழைக்கும் போக்குகளை தேர்தல் களங்களில் அதிகம் காண முடிகின்றது.தேர்தல் மேடைகளில் மிக மோசமாக, தனிப்பட்ட அந்தரங்கங்களையே கிளறிய சிலர்,அந்தக் களங்கங்கள்,கறைகள் அழிவதற்கிடையில் அடுத்த தேர்தலில் கட்சிமாறி தோளைத் தொட்டுத் தழுவிக் கொள்கின்றனர்.இக்காட்சிகள் கண்களைக் கூச்சப்படுத்தி, உள்ளங்களைக் கோணிக்குறுக வைக்கின்றன. கட்சிக்காகவும்,வேட்பாளருக்காகவும் தேர்தலில் அடிதடியில் ஈடுபட்டு,பொலிஸ், நீதிமன்றம்,விசாரணை, தவணையென அலையும் இவர்களது ஆதரவாளர்களின் காயங்களை அரசியல்வாதிகள் கண்டுகொள்வதாக இல்லை.இவர்களின் மனக்காயங்கள் ஒருபுறமிருக்க உடற் காயங்கள் சுகமடைவதற்குள்ளே அடுத்த கட்சிக்கு சிலர் தாவுகின்றமை ஆதரவாளர்களைப் பெரும் சங்கடத்தில் மாட்டுகிறது.கட்சித் தொண்டர்களின் குரோதங்கள்,பகைகள் மறைவதற்கிடையில் இவ்வாறு கட்சிதாவுவது ஏன்? கொள்கைகளுக்காக இவர்கள் உழைக்கவில்லையா? அதிகாரங்களை இலக்கு வைத்தா இந்தத் தாவல்கள்?அவ்வாறானால் நாமேன் அயலவரையும் உறவினரையும் நண்பர்களையும் அடித்துக் கொள்ள வேண்டும்,பகைத்துக் கொள்ள வேண்டும்.இவைகள் ஆதரவாளர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

ஒரு கட்சியில் உச்ச பலன்களையும் உயர்ந்த சம்பளங்களையும் அனுபவித்தவர்கள் அற்ப காரணங்களுக்காக அடுத்த கணம் கட்சி மாறுவது ஆதரவாளர்களைக் கடும் ஆச்சர்யத்துக்கும் அதிருப்திக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளாக் குகிறது.மேலும் குறித்த ஒரு கட்சியில் நிலைப்படும் நோக்கில் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்வாய்ப்புக் கள்,பதவியுயர்வுகள்,கொமிஷன், கொந்தராத்துக்களை வழங்கிய அரசியல்வாதிகள் அடுத்தகணம் கட்சிமாறினாலும் ஆதாயமடைந்த ஆதரவாளர்கள் கட்சியை விட்டுச் செல்வதற்கு தயாராகாத நிலைமைகளும் உள்ளன. இதனால் கட்சிமாறுபவர் தனியாகவே அல்லது சொற்ப வாக்குகளுடனே மாற்றுக் கட்சிக்குச் செல்ல நேரிடுகிறது.இதனால் ஆதரவாளர்களைத் தக்க வைத்தல்,வாக்கு வங்கிகளை நிலையாகப் பேணுதலில் தனித்துவ கட்சித் தலைமைகள் தடுமாறுகின்றன.மேலும் இக்கட்சிகளின் கொள்கைகள்,கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் ஆதரவாளர்களும் தூரமாகி,சலுகை,பணம், பட்டங்களுக்காக சோரம் போகும் நிலை உருவாகின்றது.

இந்த சோரம்போதல்கள் பெரும்பான்மைக் கட்சிகளையே பலப்படுத்தும்.கட்சித்தாவல்கள்,தடுமாற்றங்கள் என்பன தனித்துவ கட்சிகளின் உரிமை,விடுதலை உணர்ச்சிக் கோஷங்களை கேலிக்குள்ளாக்கி சமூக சித்தாந்தங்களை மலினப்படுத்துவது பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.இந்தக் கேலித்தன அரசியல், சாதாரண ஆதரவாளர்களை விலை போவோராக மாற்றியுள்ளதால் சிறுபான்மையினரின் பூர்வீகத் தளங்களுக்குள் பெரும்பான்மைச் சிந்தாந்தம் மீளவும் உயிர் பெறும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.

இதன் எதிரொலியாலே வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்று பெரும்பான்மை ஏஜண்டுகள் இலகுவாக நுழைய முடிந்துள்ளது.உயிரைத் துறந்தாலும் உரிமை, விடுதலை,தனித்துவ கொள்கைளை விடமுடியாது என்று உணர்ச்சியூட்டப்பட்ட தனித்துவ தலைமைகளின் ஆதரவாளர்களின் தளம்பல்கள்,விரக்திகளை நன்கு நாடிபிடித்த பெரும்பான்மை கட்சிகள் இந்த ஏஜண்டுகளூடாக சிறுபான்மை கட்சிகளின் பலத்தை சிதைக்கும் கைங்கர்யத்தில் இறங்கியுள்ளதை எவரும் கண்டு கொள்ளவில்லை.இந்தளவிற்கு யோக்கியமற்ற கட்சித் தாவல்கள் தனித்துவ கட்சிகளின் கட்டுக் கோப்புக்களை சீரழித்துள்ளமை பெரும் கவலையே. ஒருமுறை, இரண்டு தடவைகளின்றி ஒருவர் ஐந்து தடவைகளுக்கு மேல் ஒரே கட்சிக்குத் தாவித் தாவிக் குதித்தமை “சீ என்ன அரசியலிது” என்ற சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.இச்சோர்வு சிறுபான்மையினர் வாக்களிப்பில் எத்தனை வீதத்தைப் பாதிக்கும் என்பதும் ஐயத்துக்குரியதே. இந்நிலைமைகளின் தொடர்ச்சி காலப் போக்கில் தனித்துவ கட்சிகளின் தேவைகளை இல்லாமல் செய்யுமா என்பதே இன்றுள்ள கவலை. தேசிய அரசியலில் அளவுக்கதிமாக மூக்கை நுழைக்கும் சிறுபான்மைக் கட்சிகளை அழித்துவிட்டால் அல்லது பலத்தை ஒடித்து விட்டால் பெரும்பான்மைவாதம் பிழைப்பதற்கான வாசல்கள் திறக்கப்படலாம். எனவே இந்த வாசல்களைத் திறந்து விடும் கட்சித்தாவல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தனித்துவ தலைமைகள் முன்னெடுப்பது அவசியம். இல்லாவிட்டால் பேரினவாத கட்சிகளின் ஏஜண்டுகளின் தொல்லைகளில் இத்தலைமைகள் மூச்சுத்திணற நேரிடும். நாளாந்தம் பொழுது விடிவதைப்போல,அடிக்கடி கட்சித்தாவல்கள் விடுதலைச் சமூகங்களுக்கு ஆரோக்கியமாக அமையாது.அரசியலில் இதுவெல்லாம் அத்துப்படிதான் சர்வசாதாரணம்தான் என்ற எழுதப்படாத விதிகளே இந்தக் கேலித்தன அரசியலுக்கு இடமளித்து ஆதரவாளர்களைத் தடம்புரள வைத்துள்ளன. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்கின்ற விதியில் செயற் படாது கொள்கை்கு எதிரானவன் குலத்துக்கு எதிரானவன் என்ற நிலைப்பாட்டில் அரசியல் செய்து சந்தர்ப்பவாத கட்சித்தாவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, பெரும்பான்மை ஏஜண்டுகளைப் பலவீனப்படுத்தும்.

இது சாதராண அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தனித்துவ தலைமைகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியை ஆதரித்து விட்டு பாராளுமன்றத் தேர்தலில் இன்னொரு அரசாங்கத்தை ஆதரிப்பது சமூகம் சார்ந்த சித்தாந்தங்களில் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. 2013 இல் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு ஆதரவாக ஜெனீவாவில் பேசிய,தனித்துவ தலைமைகள் 2015 இல் அதே அரசாங்கத்துக்கு எதிராகக் களமிறங்கியது உள்ளூர் அரசியலில் ஏற்பட்ட திருப்புமுனையாக நோக்கப்படுவது உண்மை தான்.ஆனால் வௌிநாடுகளின் பார்வையில் இது வேறு அர்த்தத்தையே கற்பிக்கும்.ஆளும் வர்க்கம் சார்பில் முஸ்லிம் சமூகம் செயற்படுவதான புரிதலை ஏற்படுத் தினால் உரிமைக்கான போராட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் இல்லையென்றாகிவிடும். இவ்வாறான நிலைமைகளில் நடு நிலைமைப் போக்கையாவது கடைப்பிடிப்பதே சிறந்தது.

-சுஐப் எம் காசீம்-