அரை சொகுசு பஸ் சேவை இரத்தாகும் சாத்தியம்

அரை சொகுசு பஸ் சேவை இரத்தாகும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுவதால், அதனை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அரை சொகுசு பஸ்களின் ஜன்னல்களில் திரைச்சீலையை தொங்கவிட்டுள்ளமை மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரே வசதி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 10,000 பயணிகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், நூறு சதவீதமான பயணிகளும், அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெரிய வந்துள்ளது.

இது பொதுமக்களுக்கு எந்த வசதிகளையும் வழங்காத நிலையில், சாதாரண பஸ்களில் பயணிப்பதை விட அதிக செலவாகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.