சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதூரியம்!!!

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதூரியம்!!!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலின் வியூகங்கள் பிழைத்ததில் களைத்துப்போயுள்ள சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிக நிதானமாக சிந்திக்க நேரிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார நெருக்கடிகள்,தவறிப் போன அரிய வாய்ப்பை மீளவும் ஏற்படுத்துமென்பதில் சந்தேகமாக உள்ளது. பௌத்தர்களின் செல்வாக்கை மீளப் பெறுவதற்கான இக்கட்சியின் வியூகங்களுக்குள் சிறுபான்மைத் தலைமைகளுக்கு உரிய இடம் கிடைப்பதும் கேள்வியாகவுள்ளது. கிடைத்தாலும் ஆசனங்களை வெல்வதென்பது நீருக்குள் நெருப்பைக் கடத்தும் முயற்சியாகவே இருக்கும்.எனவே தமிழ்,முஸ்லிம் தலைமைகள் காலங்கடத்தாது, களத்துக்கு வரவேண்டியுள்ளது.

தமிழர்களைப் பொறுத்தவரை உரிமைகளைச் சந்தைப் படுத்தும் அரசியல்முற்றாக மழுங்கியதாகக் கருத முடியாதுதான்.ஆனால் ராஜபக்‌ஷக்களின் எதிர்கால ஆட்சியில் இவை மறுதலிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தும்விட்டது இதைக் கட்டியங்கூறும் வகையிலே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கருத்துக்கள் வௌிப்பட்டுள்ளன.

“அதிகாரப்பகிர்வு பற்றி சாதாரண மக்கள் சிந்திக்கவில்லை, அபிவிருத்தியே அவர்களின் தேவையாகவுள்ளது” என பத்திரிகை ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய தௌிவாகச் சொன்னார். இவ்வாறான நிலை ஏற்படும் என்பதை, “போருக்குப்பின்னரான பூஜ்யம்” என்ற கட்டுரையில் ஏற்கனவே தொட்டுக் காட்டியதும் எனக்கு நினைவிருக்கிறது.

மிகப்பெரிய இராணுவ இயக்கத்தையே தோற்கடித்தாயிற்று, அரசியல், ஜனநாயக ரீதியான அழுத்தங்களை வேறு வடிவில் திருப்பிவிட்டு சிறுபான்மைத் தலைமைகளை மக்களிடமிருந்து தூரப்படுத்தும் ராஜபக்‌ஷக்களின் புதிய நகர்வுகளாகவே ஜனாதிபதியின் கருத்தைப்பார்க்க வேண்டும்.தமிழ், முஸ்லிம் மக்களை சுதந்திரமாகச் சிந்தித்து வாக்களிக்க விடாத தனித்துவ கட்சிகளின் ஆயுள்களுக்கு அபாய மணி அடித்து உரிமை அரசியலை இருப்பிழக்கச் செய்வதும் தோழமைக் கட்சிகளூடாக, அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதும் தான் கோட்டாவின் கோட்பாடுகள்.

இப்புதிய கோட்பாடுகள்.தமிழர்களைக் கவருமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர் நீச்சலடிக்கவே நேரிடும். இந்நிலையில் “லண்டன் தமிழர் போரம்” புதிய பிரதமர் ஜோன் பொரிஸனுக்கு அனுப்பியுள்ள கடிதம் வடக்கு, தெற்கு உறவு, உணர்வுகளைத் தூரப்படுத்தி வைக்க விரும்புவதையே காட்டுகிறது. இதுவல்ல விடயம்.

ராஜபக்‌ஷக்களின் வெற்றிக்கு இக்கடிதம் வழிவிடுவதை போரத்தின் தலைவர் ரவிக்குமார் உட்பட புலம்பெயர் தமிழர்கள் புரியாதுள்ளதுதான் இதிலுள்ள வியப்பு.

காணாமல்போனோர்,காணி அபகரிப்பு, யுத்தக்குற்றம், சர்வதேச விசாரணைகள் தெற்கில் இவைகள்தான் பெரும்பான்மை வாதிகளின் அரசியல் முதலீடுகள். இந்த முதலீடுகளை இரட்டிப்பாக்கும் பிரசாரங்களை தமிழர் தரப்பு கைவிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய்யும் கைம்மாறாகவே இருக்கும். இந்நிலையில் முஸ்லிம் தலைமைகளைச் சொல்லவா வேண்டும்!

துரதிர்ஷ்ட வசமாக முஸ்லிம் அரசியலை ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரான போக்கு, பின்னரான போக்கு என்று வகைப் படுத்துமளவுக்கு தென்னிலங்கையில் களங்கள் விரிகின்றன. விரும்பியோ, விரும்பாமலோ ஐக்கிய தேசிய கட்சியும் இக்கள நகர்வுக்குள் நுழைந்தே காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. இதனால் தோழமைக் கட்சிகளைத் தோளில் சுமக்கும் நிலையில் ரணிலோ, சஜித்தோ இல்லை. இப்பின்புலங்களின் தௌிவில் வியூகங்கள் வகுப்பதே தனித்துவ தலைமைகளின் அடையாளத்தையாவது காப்பாற்ற உதவும்.

இதற்காக முஸ்லிம் தலைமைகள் ‘தனித்த கூட்டாகத்’ தனியாகக் களமிறங்க வேண்டும்.ஆசனப்பங்கீடு, விருப்பு வாக்குகளில் விட்டுக் கொடுப்பு போன்றவற்றில் ஏற்படவுள்ள ஒற்றுமைதான் இத்தனித்து வக்கூட்டைச் சாத்தியமாக்கும். இத்தனித்த கூட்டினூடாக தேசிய கட்சிகள் எவற்றுடனும் இரகசிய கூட்டில்லை என்பதைக் காட்டுவது கடும்போக்கர்களை உசுப்பேற்றும் முயற்சிகளைத் திசைதிருப்பலாம். இத்திரும்பல்கள், பௌத்தர்களின் வாக்குகளைப் பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சிகளுக்கு ஓரளவு புதுத்தெம்பை ஏற்படுத்தி, சோர்ந்து போயுள்ள முஸ்லிம் வாக்குகளை ஒற்றுமைப்படுத்தவும் உதவும்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சார்பு முஸ்லிம் தலைமைகளை அடிப்படைவாதிகளாகக் காட்டி இலட்சியத்தை எட்டிக் கொண்ட பெரமுனவினர், இறுதி இலக்கான பொதுத்தேர்தல் வெற்றிக்கு இதைவிடப் பன்மடங்கு பங்காற்றுவர்.தனி மாகாணம், கரையோர மாவட்டம், முஸ்லிம் பெரும்பான்மை அலகு, உள்ளிட்ட அரசியல் உரிமைகளை விடவும் மத உரிமைகளுக்கான முஸ்லிம் தலைமைகளின் குரல்கள் அடிப்படைவாதமாகக் காட்டப் படுமானால் பெரமுனக்காரர்களின் முதலீடுகளுக்கு கொள்ளை இலாபம் கிடைத்துவிடும். இதில் எவ்வித சந்தேகமே இல்லை. எனவே தெற்கை எழுச்சியூட்டும் பிரச்சாரங்களாகவன்றி,உள்ள பிரதிநிதித்துவங்களக் காப்பாற்றும் பிரசாரங்களை முன்னெடுப்பதே, தனித்துக் கூட்டாகக் களமிறங்கும் முஸ்லிம் அணிக்கு வாய்ப்பாகும். இது தவிர்ந்த உரிமை, விடுதலை, வீறாப்பு பிரச்சாரங்கள் அனைத்தும் போலிப்பேச்சாகக் கருதப்படலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் தோழமைக் கட்சிகளா கச் செயற்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன உள்ளூரப் புகைச்சலுடனே செயற்பட்டன. இல்லாவிட்டால் இவ்விரு கட்சிகளது கோட்டைகளான அம்பாரையில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், வன்னியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டிருக்குமா? மட்டக்களப்பு, குருநாகல் மாவட்டங்களிலும் இவ்விரு தலைமைகளும் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வுடன் நடக்கவில்லை. நடந்திருந்தால் குருநாகலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட்டிருக்கும்.

இந்த வடுக்களிலிருந்து விடுபடுவதுதான், இத்தலை மைகளுக்குள்ள அவசரத் தேவை. ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகள் தனியாகச் செல்வது, ஶ்ரீலங்கா பொது ஜனப் பெரமுனவின் மாவட்ட வெற்றிகளுக்கு வழியேற்படுத்துமென முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டியதில்லை. குறித்த கட்சியோடுதான் தேனிலவு எனும் அரசியல் போக்கை, கைவிடுவதில்தான் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான விமர்சனங்களை அல்லது ஐயப்பாட்டுடனான பார்வைகளைப் போக்குவதற்கு வழிவகுக்கும்.

-சுஐப்.எம்.காசிம்-