மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக மறுப்பு

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக மறுப்பு

”மலேசியாவின் அழிவுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்,” என, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், பிரதமர் நஜீப் ரசாக் மீது, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பதவி விலக வலியுறுத்தி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ‘பெர்சி’ என்ற சமூக அமைப்பு, நேற்று முன்தினம், 36 மணி நேர போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் நேற்று, மலேசியாவின், 58வது சுதந்திர தின விழாவையொட்டி, நஜீப் ரசாக், ‘டிவி’யில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

மலேசியா, பல தலைவர்களின் தியாகத்தில் உருவானது; நம் முன்னோர்கள், மக்கள், அமைதியுடன், சுதந்திரமாக வாழ, உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி பாடுபட்டு உருவாக்கிய தேசத்தை, உள்நாட்டு சக்திகளோ அல்லது அன்னியரோ சுலபமாக நுழைந்து, அழிக்க விடமாட்டோம். நம்மிடம் ஒற்றுமை இல்லையென்றால், எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. போராட்டத்தால், பொது அமைதி சீர்குலைந்தது; அதனால், பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டனர். ஜனநாயக நாட்டில், கருத்துக்களை வெளியிட, போராட்டம் சரியான வழி அல்ல. மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நான் பதவி விலக மாட்டேன். அரசின் செயல்பாடுகளை, மக்கள், ஓட்டுகள் மூலம் தீர்மானிக்கட்டும். மலேசியாவின் கரன்சி மதிப்பு குறைந்துள்ளதால், ‘நாடு திவாலாகி விடும்’ என, உள்நோக்கத்துடன் சிலர் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம். இந்த அரசு, சவாலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக, மலேசியா ‘டிவி’யில், பிரதமரின் பதிவு செய்யப்பட்ட சுதந்திர தின உரை தான் ஒளிபரப்பாகும்; ஆனால், நேற்று, நஜீப் ரசாக் நேரடியாக, ‘டிவி’யில் உரையாற்றியுள்ளார்.

(riz)