ஆஸி.வீரர் பிராட் ஹாடின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

ஆஸி.வீரர் பிராட் ஹாடின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹாடின் (Brad Haddin) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (09) அறிவித்துள்ளார்.

கடந்த இரு வருடங்களாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணைத்தலைவராக இருந்த பிராட் ஹாடின் ஓய்வின் பின்னர் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக இருபதுக்கு இருபது போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடர் தோல்வி குறித்து சிந்தித்ததாகவும் அதன் பின்னர் ஓய்வினை தீர்மானித்ததாகவும் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அணித்தலைவர் ஸ்மித் பெரும் தலைவர் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சிறந்த ஒரு  இடத்தில் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஹாடின் தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 66 டெஸ்ட் போட்டிகள், 126 ஒருநாள் போட்டிகள், மற்றும் 34 இருபதுக்கு இருபது போட்டிகள், 20 சர்வதேச பேட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)