ஹிஜாசுக்கு எதிராக இன்னும் சாட்சிகள் இல்லை : குண்டுதாரியின் வழக்கினை வழங்கியவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

ஹிஜாசுக்கு எதிராக இன்னும் சாட்சிகள் இல்லை : குண்டுதாரியின் வழக்கினை வழங்கியவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சினமன் கிராண்ட் தாக்குதல்தாரி இன்சாப் மொஹமத் இற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்ய எந்தவொரு சாட்சியும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார நேற்று(18) கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

குறித்த குண்டுதாரிக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் இற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் இடையே உள்ள ஒரே தொடர்பில் சிவில் வழக்குகள் இரண்டுடன் தொடர்புபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த இரண்டு வழக்குகளையும் வாதிடுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியே இவருக்கு வழங்கியுள்ளதாக ஹிஜாஸ் இனது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், மேலதிக விசாரணை அறிக்கையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர் சார்பில் தான் ஆஜராவதாக ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார , பசன் வீரசிங்க, ஹபீஸ் பாரிஸ், ரணிலா சேனாதீர உள்ளிட்ட சட்டத்தரணிகளுடன் ஆஜரானார்.

‘அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடாத்தப்படல் வேண்டும். அரசியலமைப்பின் இந்த சரத்தை பயங்கரவாத தடை சட்டம் மீற முடியாது. அரசியலமைப்புக்கு அப்பால் சென்று பயங்கரவாத தடை சட்டத்தை செயற்படுத்தவும் முடியாது.

அரசியலமைப்பின் 13 (1) ஆம் சரத்து ஒருவரைக் கைது செய்யும் போது அவர் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது. எனது சேவை பெறுனர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்படும் போது அவர் எதற்காக கைது செய்யப்படுகின்றார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சாட்சிகள் இதுவரை நீதிமன்றில் கூட முன்வைக்கப்படவில்லை. அவரை தடுத்து வைக்க ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதித்துள்ள, தடுப்புக் காவல் உத்தரவில், அவர் இன்சாப் அஹமட் எனும் தற்கொலை குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அந்த குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் இதுவரை எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை. இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் எனது சேவை பெறுநருக்கு ஒரு சட்டத்தரணி எனும் ரீதியிலான தொடர்பே இருந்தது.

அதாவது 2014/2015 காலப்பகுதியில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி பொறுப்பேற்று முன்னெடுத்த இரு வழக்குகள், எனது சேவை பெறுநர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தொடர்ந்து முன்னெடுக்க வழங்கப்பட்டது. அதன்படி காணி விவகாரம் குறித்த அவ்விரு வழக்குகளையும் அவர் கையாண்டார். அந்த தொடர்ப்பை தவிறவேறு எந்த தொடர்பும் குண்டுதாரிக்கும் எனது சேவை பெறுநருக்கும் இல்லை.

எனினும் தற்போது விசாரணைகள், ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் சிறுவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்து அவர்களை மூளைச் சலவை செய்ததாக கூறி விசாரணைகள் நடக்கின்றது. அது தொடர்பில் ஹிஜாச் கைதுச் செய்யப்பட்ட பின்னர், இரு சிறுவர்கள் இம்மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இரகசிய வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்துக்கு அமைய நீதிவானின் அறையில் பதியப்படும் அந்த வாக்குமூலத்தில், உள்ள விடயங்கள் மறுநாள் ஒரு சிங்கள பத்திரிகையில் உள்ளது. இது எப்படி சாத்தியம். அப்படியானால் அந்த வாக்குமூலம் ஏற்கனவே தயார்ச் செய்யப்பட்டு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதனையே இந்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

தங்களை வற்புறுத்தி வாக்கு மூலம் பெற்றதால், 3 சிறுவர்கள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூட அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். இதனைவிட, உயர் நீதிமன்ற மனுத் தாக்கலுக்காக சட்டத்தரணி நுவன் போப்பகே, சிறுவர்களிடம் சத்தியக் கடதாசி பெற்றதை, வற்புறுத்தி வாக்கு மூலம் பெற்றதாக சி.ஐ.டி. இங்கு மேலதிக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை ஊடாக எந்தளவு மோசமாக நடந்துகொள்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

தற்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக முன்னெடுத்த சேவைகளுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. சேவ் த பேர்ள் அடிப்படைவாத அமைப்பு அல்ல. அது ஒரு அறக்கட்டளை. பெளத்த விகாரைகளுக்கு கூட அவ்வமைப்பு உதவியுள்ளது. அவ்வமைப்பின் ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினர்களில் தேசிய உளவுத் துறையின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மஹீ டூலும் ஒருவர். அவரை விட சுகாதார அமைச்சின் செயலர்களில் ஒருவராக இருந்த யூனுஸ் லெப்பை மொஹம்மட் நவவியும் அதன் உறுப்பினர்களில் ஒருவர். அவ்வாறனவர்களே அவ்வறக்கட்டளையின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இவ்வறக்கட்டளை ஊடாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில் ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் 2019 மே 19 ஆம் திகதி முழுமையான வாக்கு மூலமாக வழங்கியுள்ளார். அவ்வாறு இருக்கையிலேயே எந்த சாட்சியமும் இன்றி ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்துள்ளனர். கைது செய்துவிட்டு இப்போது சாட்சி தேடுகின்றனர்.

வீரவங்ச எதிர் சட்டமா அதிபர் எனும் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின்பால் கவனத்தைச் செலுத்துங்கள். அங்கு மிகத் தெளிவாக பயங்கரவாத தடை சட்டமாக இருப்பினும் சரி எந்த சட்டமாக இருப்பினும் சரி, ஒருவர் கைதுச் செய்யப்பட்டால் அவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்படல் வேண்டும் என்கிறது. இதுவரை ஹிஜாச் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்படவில்லை. இவரது கைது முழுக்க முழுக்க அரசியல் நோக்கமானது.’என குறிப்பிட்டார்.

எனினும் அதனை மறுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் தொலைபேசி அழைப்பு பட்டியலில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கலுக்கு அமையவே கைது செய்ததாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் ரங்க திஸாநாயக்க, ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ்வை மன்றில் ஆஜர்ச் செய்ய உத்தரவிடுவது குறித்த தனது தீர்மானத்தை ஜூலை முதலாம் திகதி அறிவிப்பதாக கூறினார்.