மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை அது ஊடகங்களில் வெளியானமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கையில்;

இது கடந்த 70 வருட இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி இழிவான முறையில் பகிரங்கமாக அவமானப்படுத்தியது, அவர்களை கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பான செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளுடன் சேவை அடிப்படையில் திருப்தியின்மை இருப்பின் அதனை தனிப்பட்ட ரீதியில் விளங்கப்படுத்த முடியும். பொதுவாக அவர்களுக்கு மரியாதை வழங்கப்படுவது அவசியம்.

இது இலங்கையின் எதிர்காலமான சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச இதனை பற்றி கண்டுகொள்ளவில்லை என்பதால் மத்திய வங்கி அதிகாரிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என்று மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.