ரவீந்திர ஜடேஜா விலகல்

ரவீந்திர ஜடேஜா விலகல்

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – ஐ.பி.எல். போட்டிக்கு தயாராக சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் எதிர்வரும் செப்டம்பர் 19ம் திகதி முதல் நவம்பர் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளின்படி நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பலகட்ட கொரோனா பரிசோதனைக்கு பிறகு தான் போட்டி நடைபெறும் இடங்களுக்குள் அடியெடுத்து வைக்க முடியும்.

இந்த போட்டி தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரு வாரம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக கேப்டன் டோனி ராஞ்சியில் நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். அந்த சோதனையில் டோனிக்கு கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதேபோல் மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அத்துடன் சென்னையிலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று அல்லது நாளை தனி விமானம் மூலம் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள் அனைவரும் சென்னையில் சங்கமித்ததும் பயிற்சி முகாம் உடனடியாக தொடங்கும். பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட தனிப்பட்ட பணி காரணமாக சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் திகதி அமீரகத்துக்கு புறப்படும் முன்பாக அவர் சென்னை வந்து அணியினருடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.