கங்கனா ரணாவத்துக்காக களமிறங்கிய விஷால்

கங்கனா ரணாவத்துக்காக களமிறங்கிய விஷால்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக நடிகர் விஷால் களமிறங்கி உள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கனா ரணாவத்துக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கனா ரணாவத்.

இந்நிலையில், கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”. இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.