சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சவுதி அரேபியாவுக்கு, ஹஜ் பயணம் மேற்கொண்டனர். கடந்த வாரம், மினா நகரில், பெருந்திரளாக கூடிய யாத்திரீகர்கள், நெரிசலில் சிக்கி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இதில், இந்தியாவை சேர்ந்த 45 பேர் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்தில், உலகின் அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட, தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, இந்தோனேஷியாவை சேர்ந்த, 46 பேர் பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர்; 90 பேரை காணவில்லை. இதற்காக, சவுதி அரேபியா அரசை, இந்தோனேஷியா கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தோனேஷியாவின், மத விவகாரத்துறை அமைச்சர் லுக்மான் ஹகீம் சைபுதீன், மக்காவில், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஹஜ் விபத்து சம்பவத்தை அடுத்து, சவூதி அரேபியா அரசு, துரித நடவடிக்கை எடுக்காமல், மந்தமான போக்கை, கடைபிடித்து வருகிறது. விபத்து நடந்து ஒரு நாள் கழித்தே, இறந்தவர்களின் உடலையும், காயமடைந்தவர்களையும் பார்க்க, அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், காயமடைந்தவர்களை, மருத்துவமனைகளில் சென்று பார்க்க விடாமல், கெடுபிடிகள் செய்யப்படுகிறது. இவ்வாறு லுக்மான் ஹகீம் சைபுதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹஜ் பயண விபத்தில் பலியான, 1,100 பேரின் படங்களை, இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளின் துாதர்களிடம், சவூதி அரேபியா அரசு வழங்கியுள்ளது.