பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டு இரு தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்தினர்.

இரு தலைவர்களும் பரந்த அளவில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாக  குறிப்பிட்டதோடு வர்த்தகம் , முதலீடு, தகவல் தொழில்நுட்பம் , மனித வள மேம்பாடு, வேளாண்மை மற்றும் அறிவியல் , தொழில்நுட்பம், பாதுகாப்பு ,பாதுகாப்பு ஒத்துழைப்பு ,கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பர  ஒத்துழைப்புக்கான  வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தானின் காணப்படும்  பெளத்த பாரம்பரியத்தையும், பெளத்த மதவழிபாட்டு யாத்திரிகைக்கான பெரும் சாத்தியப்பாத்தையும் கருத்தில்கொண்டு  , விருந்தோம்பல் துறையில் இருநாட்டுக்குமிடையில் நிபுணத்துவம் பகிர்வு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த கலந்துரையாடப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான  நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் திருப்தியை வெளிப்படுத்தியதோடு அனைத்து மட்டங்களிலும் மூலோபாய தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் விரிவுபடுத்த  தீர்மானிக்கப்பட்டது.

COVID-19 தொற்றுநோயைக் கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும்  ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று  குறிப்பிடப்பட்டதோடு சர்வதேச மட்டத்தில், தொற்றுநோயின் பாதகமான சமூக-பொருளாதார தாக்கங்களைத் கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு பிரதமர் இம்ரான் கானின் “கடன் நிவாரணம் குறித்த உலகளாவிய முன்முயற்சி” இன் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் இம்ரான் கான், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான்  எப்போதும் உதவும் எனக்குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த  அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்றும்  பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் பூகோள -மூலோபாயத்திலிருந்து பூகோள பொருளாதாரத்திற்கான  அவசியம் பற்றியும்  சுட்டிக்காட்டப்பட்டது. பாகிஸ்தானின் பொருளாதார பாதுகாப்பு பார்வையின் மூன்று பிரதான அம்சங்களாக  – அமைதி, வளர்ச்சி கூட்டுப்பங்கான்மை  மற்றும் தொடர்புகள் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

கலந்துரையாடலின் மூலம் மோதல்களைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தையும், தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தினார்.

இரு தரப்பினரும் சார்க் அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர் .மேலும், பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துமும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்  அவரது தூதுக்குழுவினரும் அளித்த வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு அவரது ஆழ்ந்த பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறும்  அழைப்பை விடுத்தார்.

மேலும், சுற்றுலா, முதலீடு, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் விழாவில் இரு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக ஊடகங்களுக்கு உரையாற்றினர். இறுதியாக,பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தூதுக்குழுவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசாரத்தில்  கலந்து சிறப்பித்தனர்.