பெரும் கைகலப்பு! செங்கோளுடன் ஓடிய அவைத்தலைவர்

வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் செங்கோளுடன் வெளியேறியுள்ளதன் காரணமாக சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கு அனுமதியளிக்காத நிலையில், சபையில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், செங்கோளை எடுத்து செல்லவும் முற்பட்டுள்ளனர். இதன் காரணமாக சபையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டிருந்ததுடன், செங்கோளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சபைத் தலைவர் சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சபையிலிருந்து வெளியேற முற்பட்டார்.

எனினும், அவைத்தலைவரை வலுக்கட்டாயமாக ஆசனத்தில் அமர வைப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்ட நிலையில் அது வெற்றி பெறவில்லை.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தரப்பினரால் பிரேரிக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் டி.எம். அமரதுங்க சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து சபையை கொண்டு நடத்தியிருந்தார்.

இதன் போது எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பி.எம்.ஆர். சிறிபால மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், சபையில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லாத நிலையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.