செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை…

செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை…

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம் காட்டிவருகின்றோம் எனவும், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹேட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிறமெல் கிலாஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், இலங்கை பீங்கான் மற்றும் கண்ணாடி ரக கவுன்சிலின் தலைவருமான சஞ்ஜே திவாரி மிடாயா செரமிக் கம்பனி லிமிட்டட்டின் தலைவரும், கவுன்சலின் முன்னாள் தலைவருமான எஸ். எல். சி.ஜீ.சி தயாசிறி வர்ணகுலசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இலங்கையின் களியும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களும் உயர்ந்த தரம் வாய்ந்தவை எனவும் நமது பீங்கான் உற்பத்திப் பொருட்களும், கண்ணாடி பொருட்களும் இலகுவில் சேதமடையாதவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் இலங்கையின் மொத்த பீங்கான் மற்றும் கண்ணாடி ஏற்றுமதிப் பொருட்களின் பெறுமதியானது 61 மில்லியன் டொலரிலிருந்து 50மில்லியனாக குறைவடைந்துள்ளது.

இது தற்காலிக பின்னடைவாக இருந்தபோதும் தற்போது இத்துறைகளின் வளர்ச்சி வீதம் படிப்படியான நேரான அதிகரிப்பைக் காட்டி முன்னேற்றம் அடைந்துவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய பொறியில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முதன்முதலாக கூரை ஓடுகளை உலர்த்தும் நிலையத்தை தங்கொட்டுவையில் அமைத்துள்ளோம் மேலும் செங்களி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 இலங்கையரை பெல்ஜியம், சீன நாடுகளில் தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்கு அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.