சிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே இராஜினாமா…

சிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே இராஜினாமா…

சிம்பாப்வே பாராளுமன்றத்தில் அதிபர் ராபர்ட் முகாபேவை தகுதிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது. முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த சிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமித்தும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் கட்சித்தலைவர் மற்றும் அதிபர் பதவியிலிருந்து முகாபே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால், இராஜினாமா செய்ய முகாபே மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சிம்பாப்வே பாராளுமன்றம் அவசரமாக இன்று கூடியது. அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். அதன் மீதான விவாதத்தில் பெரும்பாலானோர் முகாபே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான எம்.பி.க்கள் பேசியுள்ளனர்.

இதற்கிடையே பேசிய, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், அதிபர் பதவி விலகுவதோடு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்போது பேசிய பாராளுமன்ற சபாநாயகர் அதிபர் முகாபே தானாக முன்வந்து பதவி விலகிவிட்டதாக அறிவித்தார். அவரது இராஜினாமா கடிதமும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் முடித்துவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகாபே இராஜினாமா செய்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.