ஃபிஃபாவுக்கு பணம் வழங்கியது உண்மை – தென் ஆப்பிரிக்கா அறிவிப்பு

2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.3 கோடி) வழங்கியது உண்மைதான் என தென் ஆப்பிரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கரீபியன் தீவு நாடுகளில் முறையான வளர்ச்சித் திட்டத்துக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அதிபர் தபோ பெகி, வெளியுறவுத் துறை அமைச்சர் கோசாஸானா லாமினி சைமா ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

ஃபிஃபாவுக்கு 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தொகை முன்னாள் துணைத் தலைவர் ஜாக் வார்னர் கட்டுப்பாட்டில் இருந்த கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமத்துக்காக ஃபிஃபாவின் செயல் அதிகாரிகள் 3 பேரின் ஓட்டுக்களை பெறுவதற்கு இந்தத் தொகை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் குற்றத்திற்காகத்தான் ஜாக் வார்னரை அமெரிக்க விசாரணை அமைப்பு தேடி வருகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்காவோ புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கர்களிடையே கால்பந்து விளையாட்டுக்கு ஆதரவு பெறும் வகையில் மேலான நோக்கத்துக்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.